பெகாசஸ் ஹேக்கிங் விவகாரம் உலகம் முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் பெகாசஸ் விவகாரம் புயலைக் கிளப்பியுள்ளது. பெகாசஸ் விவகாரத்தைத் தீவிரமாக எழுப்பிவரும் எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற கூட்டத்தொடரைத் தொடர்ந்து முடக்கிவருகின்றனர்.
அதேநேரத்தில் மத்திய அரசு, பெகாசஸ் மூலம் யாரும் உளவு பார்க்கப்படவில்லை என தொடர்ந்து கூறிவருகிறது. இந்தநிலையில், பெகாசஸ் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் விளக்கமளிக்க மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்னவ் முயன்றார். அப்போது திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் சாந்தனு சென், அமைச்சர் கையிலிருந்த காகிதங்களைப் பிடுங்கி கிழித்து எறிந்தார். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில், இன்று (23.07.2021) அவை கூடியபோது மாநிலங்களவை சபாநாயகரும், அவைத் தலைவருமான குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, இந்த விவகாரம் தொடர்பாக வேதனை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர், "அவையில் நடைபெற்ற நிகழ்வுகளால் மிகவும் வேதனையடைந்தேன். துரதிர்ஷ்டவசமாக அவையின் நடவடிக்கைகள் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமாகியுள்ளது. அமைச்சரிடமிருந்து காகிதங்கள் பறிக்கப்பட்டு கிழித்து எறியப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தின் ஜனநாயகம் மீதான தெளிவான தாக்குதல்" என தெரிவித்தார்.
இதனையடுத்து திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் சாந்தனு சென்னை இடைநீக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து அவர் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.