ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள், அரசு அலுவலங்கள், கோயில்கள் முதலியன கடந்த பல மாதங்களாக மூடியிருந்தன. இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சில தளர்வுகளால் படிப்படியாக அவைகள் திறக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் பெரிய கோயில்கள் திறப்பது பற்றி மத்திய அரசு இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. சமூக இடைவெளி கேள்விக்குறியாகும் என்பதால் இந்தியாவில் பல கோயில்கள் இன்னும் திறக்கபடவில்லை. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் திறக்கப்பட்டது. தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். ஒரு நாளைக்கு தற்போது 6,000 வரையிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் அது தற்போது 12,500 ஆக அதிகரித்துள்ளது. தரிசனம் மீண்டும் தொடங்கப்பட்டு ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் இதுவரை 2,63,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுவரை உண்டியல் வசூலாக 15.80 கோடி வசூலாகி உள்ளது. பக்தர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதால் வருவாய் பெருமளவு குறைந்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.