தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. பாஜக, இந்துத்துவா அமைப்புகள் போன்றவை அமைச்சர் உதயநிதிக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அவரது பேச்சுக்கு ஆதரவான கருத்துகளும் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகத் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து, ராம நாமத்தை போல் கோவிந்த நாமத்தை ஒரு கோடி எழுதி அனுப்பும் இளைஞர்களுக்கு வி.ஐ.பி தரிசனம் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
திருமலை - திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான புதிய அறங்காவலர் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகர ரெட்டி தலைமையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் குறித்து அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகர ரெட்டி கூறியதாவது, “தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்திற்கு எதிராக விமர்சனம் செய்ததற்காக திருமலை - திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான குழுவினர் சார்பில் எங்களது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சனாதனம் என்பது ஒரு மதம் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. இந்த விஷயம் தெரியாமல் சனாதன தர்மம் குறித்து விமர்சனம் செய்வதால் சமூகத்தில் கலவரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சனாதன தர்மத்தை இந்து மக்கள் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும். இது குறித்து நாம் மக்களுக்கு பிரச்சாரங்கள் மூலம் தெரியப்படுத்த வேண்டும். இளைஞர்களிடையே இந்து சனாதன தர்மத்தை பரப்பும் நிகழ்ச்சியை ஏழுமலையான் கோவிலில் இருந்து தொடங்க உள்ளோம். அதன் ஒரு பகுதியாக, ராம நாம பாணியில் கோவிந்த நாமத்தை ஒரு கோடி முறை எழுதும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
மேலும், 10 லட்சத்து 1,116 முறை கோவிந்த நாமத்தை எழுதி வருவோருக்கு ஏழுமலையான் தரிசன பாக்கியம் கிடைக்கும். மேலும், சனாதன தர்மத்தை ஊக்கப்படுத்தவும், இளமைப் பருவத்திலேயே பக்தியை அதிகரிக்கவும், எல்.கே.ஜி முதல் பி.ஜி வரை படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு சனாதன தர்மத்தையும், மனிதாபிமானத்தையும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பகவத் கீதையை 20 பக்கங்களில் சுருக்கிட்டு புத்தக வடிவில் அச்சிடப்பட்டு பிரசாதமாக வழங்கப்படும். அதற்காக மொத்தம் 1 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.