இந்தியாவில் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தக் கோரி கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பில் எஸ்சி மற்றும் எஸ்.டி பிரிவு மக்களைத் தவிர வேறு பிரிவு மக்களைச் சாதிவாரியாகக் கணக்கிடக் கூடாது என்று கொள்கை முடிவு எடுத்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தெரிவித்தது.
இருப்பினும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகின்றன. பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளமும் இதே கோரிக்கையை முன்னிறுத்தி வருகிறது. மேலும் இன்று ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் தலைமையில், அனைத்து கட்சி குழு டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது.
இந்தநிலையில் பிற்படுத்தப்பட்ட மக்களை சாதிவாரியாக கணக்கெடுக்க வேண்டும் என ஆந்திர சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் கூறப்பட்டுள்ளபடி, அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சம நீதியை உறுதி செய்வதற்காக சாதி வாரியிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த தீர்மானத்தில், "பிற்படுத்தப்பட்ட மக்களில் உள்ள ஏழைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைக்கான சலுகைகளை விரிவுபடுத்துதல் போன்ற தீர்க்கமான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மேம்பாட்டிற்காக பல்வேறு நல மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வதற்கும் துல்லியமான புள்ளிவிவரங்களை பராமரிப்பது அவசியம்" எனவும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.