Skip to main content

பிரபல தாதாவின் மகன் உட்பட மூன்று வாலிபர்கள் படுகொலை; புதுச்சேரியில் பரபரப்பு!

Published on 14/02/2025 | Edited on 14/02/2025

 

Three youths, including the son of a famous Dada, incident in Puducherry

புதுச்சேரி ரெயின்போ நகர் ஏழாவது குறுக்கு தெருவில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில், இரண்டு வாலிபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டும், மற்றொரு வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் கிடந்துள்ளனர். இன்று காலை இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியகடை காவல்நிலைய போலீசார், அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த இரண்டு வாலிபர்களின் உடலை மீட்டு,  வெட்டுக் காயங்களுடன் இருந்த மற்றொரு வாலிபரை மீட்டு மருத்துவமனை அழைத்துச் சென்ற நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொலை செய்யப்பட்ட நபர்கள் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தது மறைந்த பிரபல தாதா தெஸ்தானின் மகன் ரிஷித் என்பதும், மற்றொருவர் திடீர்  நகரை சேர்ந்த தேவா என்பதும், மற்றொருவர் ஜெ.ஜெ நகரைச் சேர்ந்த ஆதி என்பதும் தெரியவந்தது. மேலும் இந்த மூன்று பேரும் விடியற்காலை வரை அந்த பாழடைந்த வீட்டில் மது அருந்தியதாகவும், அப்போது அவர்களுடன் மது அருந்திய நபர்கள் இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைத்தான்யா கொலை குறித்து போலீசாரிடம் கேட்டறிந்து, கொலையாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து போலீசார் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை உடற்கூறு ஆய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடியிருப்பு நிறைந்த பகுதியில் மூன்று வாலிபர்கள் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்