இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டி கடந்த ஞாயிறன்று (24.10.2021) நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டி முடிந்து சில தினங்கள் ஆகிவிட்ட பிறகும், இந்தப் போட்டி தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. போட்டிக்குப் பிறகு பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியதாகவும், இந்தியாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாகவும் ஜம்மு காஷ்மீரில் உள்ள இரண்டு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த சில மாணவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பாய்ந்துள்ளது. பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியதாக மூன்று ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் உட்பட ஏழுபேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த மூன்று மாணவர்கள் மீது வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை வளர்த்தல், தேசத்துரோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே நீதிமன்றத்திற்கு வரும்போது, அடையாளம் தெரியாத சில வழக்கறிஞர்கள் மற்றும் உதவியாளர்களால் மூன்று மாணவர்களும் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் மாணவர்களைத் தாக்கியவர்கள் பாரத் மதாகி ஜே என கோஷங்களை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.