"வாஷிங் பவுடர் நிர்மா.. வாஷிங் பவுடர் நிர்மா.. நிர்மா.. எனும் விளம்பரப் பாடலைக் கேட்டால் இப்போதும் நம்மில் பலருக்கும் இளமைக்கால நினைவுகள் கண் முன்னே வந்துபோகும். ஆனால், இந்த 'நிர்மா' ஒருவரின் வாழ்க்கையில் மிகப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை காலங்களை முன்னிட்டு பல நிறுவனங்களும் தங்களது பொருட்களை 'சிறப்புத் தள்ளுபடியில்' விற்பனை செய்யத் தொடங்கிவிட்டது. இந்த விழாக்கால சிறப்புத் தள்ளுபடிக்கு 'ஃப்ளிப்கார்ட்', 'அமேசான்', போன்ற பெருநிறுவனங்களும் விதிவிலக்கல்ல. தீபாவளியை முன்னிட்டு மிகக் குறைந்த விலையில் பொருட்கள் விற்கப்படுவதாக, பல நூறு விளம்பரங்கள் நமது நோட்டிஃபிகேஷனை நிரப்புகின்றன. அந்தவகையில், ப்ளிப்கார்ட் நிறுவனம், 'பிக் பில்லியன் சேல்ஸ்' எனும் ஆஃபரின் கீழ் பிராண்டட் பொருட்களை, குறைந்த விலையில், குறுகிய காலத்திற்குள் விற்பனை செய்து வந்தது.
இதைப் பார்த்ததும், குறைந்த விலையில் ஆப்பிள் ஐஃபோன் வாங்க நினைத்துள்ளார் வாடிக்கையாளரான சிம்ரன்பால் சிங். ஆப்பிள் ஐஃபோன் 12-ஐ, ரூபாய் 51,999-க்கு ஃப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்துள்ளார் சிம்ரன்பால். கடந்த அக்டோபர் 4-ம் தேதி, ஃப்ளிப்கார்ட்டில் இருந்து ஐஃபோன் வந்துள்ளதாக அந்நிறுவனத்தின் ஊழியர் அவரை தொடர்புகொண்டு கூறியுள்ளார். அப்போது, 'ஓபன் பாக்ஸ் டெலிவரி' முறையின் கீழ், ஃப்ளிப்கார்ட் ஊழியர் முன்னிலையிலேயே திறந்துள்ளார். அத்துடன், அதை வீடியோவாகப் பதிவும் செய்துள்ளார். ஐஃபோன் கனவுடன் பாக்சை திறந்து பார்த்தபோது, ஐந்து ரூபாய் மதிப்புள்ள இரண்டு நிர்மா சோப்புகள் இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிம்ரன்பால், ஃப்ளிப்கார்ட் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், ஊழியரோ, உங்கள் OTP சொல்லுங்க எனக் கூறியுள்ளார்.
இதனால், மேலும் கடுப்பான சிம்ரன்பால், 'ஐஃபோன் ஆர்டர் பண்ண எனக்கு சோப்புக் கட்டி வந்துருக்குனு சொல்றேன் நீங்க OTP கேட்டுட்டு இருக்கீங்க' என ஆவேசமாகப் பேசியுள்ளார். ஆனாலும், அந்த ஊழியர் OTP எண்ணை வாங்கிவிடுவதிலேயே குறியாக இருந்துள்ளார்.இதனால் சந்தேகமடைந்த சிம்ரன்பால், உடனே ஃபிளிப்கார்ட் கஸ்டமர் கேர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, நடந்த சம்பவத்தை விரிவாக விளக்கியுள்ளார். ஃபிளிப்கார்ட் தரப்பில் கவலைப்படத் தேவையில்லை, உங்கள் பணம் பத்திரமாக இருக்கிறது. இன்னும் 24 மணி நேரத்திற்குள் உங்களது ஆர்டர் கேன்சல் செய்யப்பட்டுவிடும். அதன்பிறகு, உங்களது பணம் உங்கள் பேங்க் அக்கவுண்டுக்கே வந்துவிடும் எனக் கூறியுள்ளனர். ஆனாலும், தொடர் அலைக்கழிப்புக்குப் பிறகு, சுமார் 5 நாட்கள் கழித்தே பணம் சிம்ரன்பாலின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து சிம்ரன்பால் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஆர்டர் செய்யும் அனைவரும் 'ஓபன் பாக்ஸ் டெலிவரி' முறையைப் பயன்படுத்துங்கள். என்னைப் போலவே எல்லாருக்கும் போன பணம் திரும்ப கிடைத்துவிடாது. ஆகையால் விழிப்புணர்வுடன் ஆர்டர் செய்யுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே பல தளங்களில் இதுபோன்ற மோசடி சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால், ஃப்ளிப்கார்ட் போன்ற ஒரு நம்பிக்கையான பெரிய நிறுவனத்தில் நடந்துள்ள இந்தச் சம்பவம் பலரது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.