தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் நேற்று முன் தினம் இரவு தமிழ்நாட்டை விட்டு ஆந்திர மாநிலக் கடலோரத்தை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை ஓய்ந்து, ஆந்திராவில் கன மழை பெய்ய துவங்கியது. அதுமட்டுமல்லாமல், ஆந்திராவில் மிக்ஜம் புயல் கரையைக் கடந்ததால், அங்கு மணிக்கு 100 முதல் 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால், ஆந்திராவின் வட கடலோர மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
மிக்ஜம் புயல் காரணமாக ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், கிட்டேடுவில் அதிகபட்சமாக 39 செ.மீ, நெல்லூர் மாவட்டம், மனுபோலுவில் 36.8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இன்னும் பல இடங்களிலும் கன மழை பெய்துள்ளது. இதனால், ஆந்திராவின் பல ஆறுகள் முழு கொள்ள அளவை எட்டி வெள்ள நீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளிலும், வயில்களிலும் சூழந்ததுள்ளது. புயல் கரையை கடந்த போது வீசிய சூறாவளி காற்றால் பல இடங்களிலும் மின் கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவை சாய்ந்து பல சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிக்ஜாம் புயல் தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி 11 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பி.க்கள் துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடத்தியிருந்தார். அப்போது அவர், போர்க்கால அடிப்படையில் புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணி நடைபெறவேண்டும். மேலும், உடனுக்குடன் மின் இணைப்பு வழங்க வேண்டும். 48 மணி நேரத்திற்குள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கிட வேண்டும். அனகாபல்லி பகுதியில் மட்டும் 52 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, இதுவரை 60 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். விவசாயிகள் நஷ்டம் அடையக்கூடாது என அரசே இதுவரை 1 லட்சம் டன் தானியங்களை வாங்கியுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
மிக்ஜம் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், ஆந்திராவில் இதுவரை 194 கிராமங்களில் இருந்து 40 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 25 கிராமங்களும், 2 நகரங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டு மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திராவில் இதுவரை மிக்ஜாம் புயலால் ஏழு பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 70க்கும் மேற்பட்ட கூரை வீடுகள் சேதம் அடைந்துள்ளது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், மின் கம்பங்கள் பலத்த சேதமும் அடைந்துள்ளது. தற்போது ஆந்திர மாநில அரசு உடனடியாக 23 கோடியை மீட்புப் பணிக்காக ஒதுக்கியுள்ளது என ஆந்திர அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.