சனிப்பெயர்ச்சியையொட்டி, திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மாநிலம், காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்திப் பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிபகவான் தனி சன்னதிக் கொண்டு அருள்பாலித்து வருகிறார். இந்த கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கியப் பஞ்சங்கப் படி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இக்கோயிலில் இன்று (27/12/2020) அதிகாலை 05.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. சனீஸ்வர பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார். அதைத் தொடர்ந்து சனீஸ்வர பகவானுக்கு விஷேச பூஜைகள் நடைபெற்றது.
இந்த சனிப்பெயர்ச்சி விழாவில் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, தருமபுரம் ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், சாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமில்லை என்ற போதிலும், ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் கரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதால் நள, பிரம்ம தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி 100- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சனிப்பெயர்ச்சி விழாவை மக்கள் வீட்டில் இருந்தபடியே காணும் வகையில், கோயில் நிர்வாகம் சார்பில் திருநள்ளாறு கோயிலின் இணையதள பக்கத்திலும், சமூக வலைத்தளங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.