Skip to main content

சோனியா காந்தி வீட்டில் திடீரென கூடிய எதிர்க்கட்சிகள் - ஆலோசிக்கப்பட்டது என்ன?

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

sonia gandhi

 

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர், விரைவில் வரவிருக்கும் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான ஆயத்த பணிகள் என பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நேற்று (14.12.2021) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அதிகாரபூர்வ இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர்.

 

எதிர்க்கட்சிகளின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கும், தாங்கள்தான் பிரதான எதிர்க்கட்சி என்பதை மம்தாவுக்கு உணர்த்தவும் காங்கிரஸ் நடத்தியதாக கூறப்படும் இந்தக் கூட்டத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், திமுக எம்.பி. டி.ஆர். பாலு, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சிபிஐ(எம்) தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் கலந்துகொண்டனர். அதேபோல் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

 

இந்தக் கூட்டத்தில், பாஜகவை எதிர்கொள்ள மாநில வாரியாக ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. மேலும் இந்தக் கூட்டத்தில், 12 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து வெங்கையா நாயுடுவிடம் பேசுமாறு சரத் பவாரை எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

இவற்றைத்தவிர, திரிணாமூல் காங்கிரஸ் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைத் தாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், அப்போது மம்தா ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற ஒன்று தற்போது இல்லை என கூறியதில் தனது நிலை குறித்து சரத் பவார் விளக்கமளித்ததாகவும் கூறியுள்ள தகவலறிந்த வட்டாரங்கள், இதுபோன்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் அடிக்கடி நடைபெற வேண்டும் என கூறியதாகவும் தெரிவித்துள்ளன.

 

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்