மத்தியப் பிரதேச மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்று தேவாஸ். தேவாஸ் மாவட்டத்தில் உள்ள சிவில் லைன்ஸில் இருக்கிறது அரசு அதிகாரிகளுக்கான குடியிருப்பு. இங்குதான் தேவாஸ் மாவட்டத்தின் துணை ஆட்சியரான திரிலோச்சன் கவுருக்கும் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. திரிலோச்சன் கவுரின் மனைவி ரத்லம் மாவட்டத்தில் மாஜிஸ்திரேட்டாக பணிபுரிகிறார். அரசு அதிகாரிகளின் குவாட்ரஸ் என்பதால் அங்கு பாதுகாப்புக்குக் குறைவே கிடையாது. ஆனால், துணை கலெக்டர் திரிலோச்சன் கவுரும் அவரது மனைவியும் அலுவல் நிமித்தமாக வார இறுதி நாட்களில் தான் வீட்டுக்கு வருவார்கள். இதை நோட்டமிட்ட ஒருவர் எப்படியோ அத்தனை பாதுகாப்புகளையும் மீறி உள்ளே நுழைந்துள்ளார்.
அரசு அதிகாரிகளின் வீடு என்பதால் மொத்தமாகச் சுருட்டலாம் எனும் கனவில் வீட்டுக்குள்ளே நுழைந்துள்ளார். ஆனால், மிகச் சொற்ப அளவிலான பணமும் நகையும் கிடைக்கவே ஏமாந்து போயுள்ளார். அத்துடன் அரசு அதிகாரி பயன்படுத்தும் நோட் பேடில், “பணம் இல்லாத வீட்டை ஏன் சார் பூட்டிட்டுப் போறீங்க?”என ஒரு கடிதத்தை எழுதி இறுதியில் கையெழுத்தும் போட்டுவிட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று வீட்டுக்கு வந்த திரிலோச்சன் கவுரும் அவரது மனைவியும் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அத்துடன், சுமார் 30 ஆயிரம் ரூபாய் பணமும் நகைகளும் களவு போயிருந்தன. உடன் திருடன் கைப்பட எழுதி விட்டுச் சென்றிருந்த கடிதமும் கிடந்தது. அதே குவாட்ரசில்தான் இந்த மாவட்டத்தின் உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடு இருப்பது குறிப்பிடத்தக்கது.
உடனே, இந்தச் சம்பவம் குறித்து, துணை கலெக்டர் திரிலோச்சன் கவுர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகார் குறித்து பத்திரிகையாளரிடம் கூறிய போலீஸ் அதிகாரி உம்ராவ் சிங், “அதிகாரி திருலோச்சன் கவுரும் அவரது மனைவியும் செப்டம்பர் 20 அன்று வேலை நிமித்தமாக வெளியில் சென்றுள்ளனர். கடந்த அக்டோபர் 9 அன்று தங்கள் இல்லத்திற்குத் திரும்பியுள்ளனர். அப்போது, சுமார் 30,000 ரூபாய் ரொக்கமும் சில நகைகளும் திருலோச்சன் கவுரின் வீட்டில் இருந்து திருடப்பட்டுள்ளதாகப் புகார் கூறியுள்ளனர். கடிதம் எழுதுவதற்காக, அரசு அதிகாரியின் நோட்பேடு மற்றும் பேனாவை திருடன் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளியை விரைந்து கண்டுபிடிப்போம்” இவ்வாறு கூறினார்.
பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் அரசு அதிகாரிகளின் குவாட்ரஸுக்குள் நுழைந்து திருடியதோடு மட்டுமல்லாமல், பணம் பத்தவில்லை எனத் துணை கலெக்டருக்கே கடிதம் எழுதிவைத்துவிட்டுச் சென்றது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.