மோடி அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவையில் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார்.
இந்நிலையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்பொழுது பேசுகையில், “2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஊழலையும், வாரிசு அரசியலையும் பிரதமர் மோடி முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார். அறுதிப் பெரும்பான்மையுடன் மக்கள் எங்களை இரண்டு முறை தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களால் மிகவும் விரும்பப்படும் பிரதமராக மோடி திகழ்கிறார். ஊழல் மற்றும் வாரிசு அரசியலைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்துள்ளோம். இப்பொழுது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மக்களிடம் அச்சத்தை உருவாக்க கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.
மக்களிடம் ஒரு மாயையை உருவாக்கவே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். பிரதமர் மோடி ஆட்சியில் 11 கோடி கழிப்பறைகள் நாடு முழுவதும் கட்டப்பட்டுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி அதிக பெண்கள் சமைக்கத் தொடங்கினார்கள். அரசியல் உள்நோக்கங்களுக்காக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது'' என்றார்.
தொடர்ந்து மணிப்பூர் கலவரம் குறித்து அமித்ஷா பேசுகையில், ''மணிப்பூர் கலவரத்தை வைத்து அரசியல் செய்வதை அனுமதிக்க முடியாது. மணிப்பூரில் கலவரம் நடந்தது உண்மைதான். ஆனால் நடந்த கலவரத்தை யாரும் ஆதரிக்கவில்லை. பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ வெளியான உடனே அரசு நடவடிக்கை எடுத்தது. மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண மெய்த்தி மற்றும் குக்கி சமூக மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இதை வைத்து யாரும் அரசியல் செய்யக்கூடாது. மணிப்பூரில் தற்பொழுது வன்முறை குறைந்து வருகிறது. மணிப்பூரில் அமைதி நிலவ நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். மணிப்பூர் மாநில முதலமைச்சரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை'' என்றார்.