இந்தியாவிலேயே சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை சென்னை மாநகரம் அதிக அளவில் குறைத்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசின் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துகள் மற்றும் அதற்காக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற சாலை விபத்துகள் தொடர்பான விரிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, நாடு முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் 67 சதவிகித சாலை விபத்துக்கள் நேரான சாலைகளிலேயே நிகழ்ந்துள்ளன. மொத்தமாக 2022-ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,68,491 பேர் சாலை விபத்துகளால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. விபத்துகளின் தீவிர தன்மை தேசிய சராசரியை விட தமிழகத்தில் குறைவாக உள்ளது.
நாட்டிலேயே சாலை விபத்துக்களால் அதிக அளவில் மரணங்கள் ஏற்படும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளின் நிகழும் சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் உத்தரப் பிரதேசத்தில் அதிகமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏற்பட்ட சாலை விபத்துகளின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-ல் 3.84 லட்சம் சாலை விபத்துக்கள் நடந்த நிலையில், 20220ல் 4.44 லட்சம் சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் 72.4 சதவிகித விபத்துகளால் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் 75.2 சதவிகித உயிரிழப்புகள் அதிவேகத்தின் காரணமாகவே நடந்துள்ளன. சாலை வளைவுகள், பாலங்கள், மேடு பள்ளங்களை விட நேரான சாலைகளில் தான் அதிக விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.