மும்பை மலாட் பகுதியில் உள்ள சாவ்டா வணிக வளாகத்தின் 2வது மாடியில், சமீர் காந்தி , கார்த்திக் காந்தி என்ற சகோதரர்கள் , காந்தி தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இரு சகோதரர்களும் வழக்கமாக தங்கள் அலுவலகத்துக்கு காலை வந்து விட்டு இரவு ஆபீஸ் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புவது வழக்கம். அவர்களின் நிறுவனத்தில் வாட்ச்மேனாக 10ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்துவருபவர் விரேந்திர குமார் சர்மா. சம்பவத்தன்று இரவு சமீர் காந்தி , கார்த்திக் காந்தி இருவரும் வீடு திரும்பும் நோக்கில் வணிக வளாகத்தின் படிக்கட்டுகளில் இறங்கி வந்தபோது, முகமூடி அணிந்த ஒருவர் அவரிடம் தங்களிடம் உள்ள பணத்தை கொடுங்கள் இல்லையென்றால் சுட்டு விடுவேன் என்று துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.
இதனால் சகோதரர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், சமீர் திடீரென கொள்ளையன் கையில் இருந்த துப்பாக்கியை பிடித்து தரையை நோக்கி அழுத்தினார். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி இரண்டாக உடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையன் அங்கிருந்து தப்பிக்க ஓடினார். அவனை இரு சகோதரர்களும் துரத்தி கொண்டு பின் தொடர்ந்தனர். அப்போது அங்கு அருகில் இருந்தவர்களும் சேர்ந்து அந்த கொள்ளையனை பிடித்து உதைத்து, அவனது முகமூடியை கழற்றினர்.
அப்போதுதான் தெரிந்தது கொள்ளையயடிக்க முயன்ற நபர், தனது நிறுவனத்தின் காவலாளி விரேந்திர குமார் சர்மா என்பது பின்பு அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், காவலாளி மீது கொள்ளை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையின்போது, தான் ஊருக்கு செல்ல அவசரமாக பணம் தேவைப்பட்டதாகவும், தங்களது நிறுவனத்தில் பணம் தராததால், கொள்ளையடிக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். கொள்ளையடிக்கும் போது பொம்மை துப்பாக்கி உடைந்து திருடன் மாட்டிய சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.