ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரில் மதுபான பார் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (26-05-24) நள்ளிரவு 1 மணியளவில், அடையாளம் தெரியாத ஒருவர், மதுபான கடைக்குள் வந்து அங்கிருந்த ஊழியரை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயமடைந்த ஊழியர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனையடுத்து, அங்கிருந்த மற்றவர்கள் படுகாயமடைந்த ஊழியரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஊழியர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மதுபான கடையில் ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், துப்பாக்கி வைத்திருக்கும் அடையாளம் தெரியாத நபர், மேலாடையின்று கால் சட்டை மட்டும் அணிந்து, டி-ஷர்ட் ஒன்றால் முகத்தை மூடியபடி, துப்பாக்கியை காட்டியபடியே கடைக்குள் வந்தார். அப்போது அவர், அங்கு செய்வதறியாத நின்ற ஊழியரின் நெஞ்சுக்கு நேராக தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து செல்வது காணப்படுகிறது.
இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், மதுபான கடை மூடப்பட்ட பிறகு 5 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் கடைக்குள் வந்து மதுபானம் கேட்டு ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளனர். அதற்கு ஊழியர்கள், கடை மூடப்பட்ட பிறகு மதுபானம் தரமுடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர். இதில், இரு தரப்புக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதன் பின், அந்த 5 பேரும் வெளியே சென்றுவிட்டனர். இதனையடுத்து, அவர்களில் ஒருவர் மீண்டும் கடைக்கு வந்து துப்பாக்கியால் ஊழியரை சுட்டு கொலை செய்து தப்பியோடிவிட்டார் என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து தப்பியோடிய குற்றவாளியைத் தேடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.