அக்டோபர் 15- ஆம் தேதி முதல் திரையரங்குகளைத் திறக்க மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் திரையரங்குகளை திறக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.
அதன்படி, 'திரையரங்குகளில் ஒரு இருக்கை இடைவெளி விட்டு ஒருவர் அமர வழங்க அனுமதி வழங்க வேண்டும். அனைவரும் மாஸ்க் அணிந்த படியே தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும். படம் முடிந்த பிறகு ஒவ்வொரு முறையும் தியேட்டர்களை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். 50% இருக்கைகளில் மட்டும் ரசிகர்களை அனுமதித்து திரையரங்குகளைத் திறக்கலாம். ரசிகர்கள் திரையரங்கிற்குள் செல்லும் போது சானிடைசர் வழங்கப்பட வேண்டும். ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்க வேண்டும். கூட்டத்தைத் தடுக்க டிக்கெட் விற்பனைக்கு கவுண்டர்கள் நாள் முழுவதும் திறந்து வைக்கப்பட வேண்டும். பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளை மட்டுமே தியேட்டர்களில் தர வேண்டும். திரையரங்குகளில் 24 முதல் 30 டிகிரி வரை ஏசி அளவை கடைப்பிடிக்க வேண்டும். கரோனா விழிப்புணர்வு வீடியோக்களை தியேட்டரில் இடைவேளையின்போது ஒளிபரப்ப வேண்டும். படம் பார்க்க வருபவர்களை உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே திரையரங்கிற்குள் அனுமதிக்க வேண்டும். கரோனா அறிகுறி இருந்தால் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்படக்கூடாது.' இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள போதிலும், தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.