Skip to main content

‘முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி’ -  கேரள முதல்வர் பினராயி விஜயன்!

Published on 04/08/2024 | Edited on 04/08/2024
'Thanks to CM Stalin' - Kerala Chief Minister Pinarayi Vijayan!

கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் கடந்த ஜூலை 30ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில்  முப்படையைச் சேர்ந்த வீரர்கள், பேரிடர் மீட்புப்படையினர் உள்ளிட்ட வீரர்கள் ஆறாவது நாளாக இன்றும் (04.08.2024) மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி 357 பேர் உயிரிழந்தது இந்தியாவையே உலுக்கியுள்ளது.

இதற்கிடையே வயநாடு பகுதியில் கடும் மழைப்பொழிவு மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுடன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதனையொட்டி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான உதவிகளைத் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். மேலும் அந்த உத்தரவில் கேரளாவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளத் தமிழ்நாடு சார்பில் அரசு ரூ. 5 கோடியை வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கேரள அரசிற்கு 5 கோடி ரூபாய்க்கான காசோலையினை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு வழங்கினார்.

இந்நிலையில் தமிழ்நாடு சார்பாக வயநாடு நிவாரணப் பணிகளுக்காக ரூ.5 கோடி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக்  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் நிவாரணப் பணிகளுக்காக ரூ. 5 கோடியை வழங்கியதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தமிழ்நாடு அரசிற்கு நன்றி. உங்களின் இந்த ஆதரவும் ஒற்றுமையும் மிகவும் பாராட்டப்படுகிறது. இந்த நிதி மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளுக்குப் பெரிதும் உதவும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்