ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அரசால் நவீன தரத்தில் மேம்படுத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு ஆய்வகங்களில் ஜூலை 6 மற்றும் 12ஆம் தேதிகளில் தயாரித்த நான்கு லட்டு நெய் மாதிரிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் அடிப்படையில், லட்டுக்களைத் தயாரிக்கப் பயன்படுத்தும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது உண்மைதான் எனத் திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ் தெரிவித்திருந்தார். திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்ந்து பேசுபொருளாகி வரும் நிலையில், திருப்பதி லட்டில் போதைப்பொருளான குட்கா பாக்கெட் இருந்ததாகப் பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றைக் கூறியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் தெலங்கானாவின் திருப்பதி என அழைக்கப்படும் யதாத்ரி கோயில் லட்டு பிரசாதத்திலும் கலப்படம் இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையொட்டி லட்டில் கலப்படம் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யைப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகக் கோயில் செயல் அலுவலர் பாஸ்கர ராவ் தகவல் தெரிவித்துள்ளார். யாத்ரி கோயிலில் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் லட்டுகள் வரை பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் ஆந்திராவில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சென்று பிரசாதங்களின் மாதிரிகளைச் சேகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.