மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் கடந்த மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். மேலும், 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
அதே சமயம் மணிப்பூர் முழுவதும் வன்முறை பரவுவதற்கு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களும், வதந்திகளும் காரணம் எனக் கூறி கடந்த மே மாதம் 23 ஆம் தேதி முதல் இணைய சேவையை அம்மாநில அரசு முடக்கியது. மேலும், அதில் அரசு ஒப்புதல் பெறப்பட்ட எண்களைத் தவிர்த்து அனைத்து மொபைல்களிலும் இணைய சேவை முடக்கப்பட்டது. இதையடுத்து 4 மாதங்களுக்குப் பிறகு கலவரம் குறைந்த பகுதிகளில் கடந்த 23 ஆம் தேதி முதல் இணைய சேவை வழங்கப்பட்டது. இந்த சூழலில் கடந்த ஜூலை மாதம் காணாமல் போன இரு மாணவர்களின் சடலங்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானதால் மீண்டும் அங்கு பதற்றத்தை உருவாக்கியது.
அதனை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி இம்பாலில் உள்ள முதல்வர் பைரங் சிங்கின் பூர்வீக வீட்டின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். இதனால், பல்வேறு இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வந்தனர். மேலும், உயிரிழந்த அந்த இரு மாணவர்களின் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ விசாரித்து வருவதாகவும், உடனடியாக குற்றவாளிகளை பிடித்து நடவடிக்கை எடுப்பதாகவும் அண்மையில் பைரன் சிங் செய்தியாளர்களைச் சந்தித்து கூறினார். மேலும், இந்த மணிப்பூர் வன்முறையில் அண்டை நாட்டின் சதி இருப்பது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு ( என்.ஐ.ஏ) தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ.யும், என்.ஐ.ஏ.வும் இரு மாணவர்கள் கொலை வழக்கு தொடர்பாக 2 சிறுவர்கள் உள்பட 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் குக்கி சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், இந்த கைது நடவடிக்கையை கண்டித்து பழங்குடி சமூகம் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு பழங்குடியின அமைப்பினர் நேற்று அழைப்பு விடுத்திருந்தன. அதில், கைதான வாலிபர்கள் 48 மணி நேரத்தில் விடுவிக்க கோரியும், சுராசந்த்பூரைச் சேர்ந்த கூட்டு மாணவர் அமைப்பு 12 மணி நேர அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி, சுராசந்த்பூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இந்த முழு அடைப்பு போராட்டத்தினால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, குக்கி சமூக இளைஞர்களை குறிவைத்து கைது நடவடிக்கை நடக்கப்பட்டுள்ளது என்று பழங்குடியின அமைப்பினர் வைத்த குற்றச்சாட்டை சி.பி.ஐ.யும், என்.ஐ.ஏ.வும் மறுத்துள்ளது. மேலும், வன்முறை தொடங்கியதில் இருந்தே ஆதாரங்கள் அடிப்படையில் தான் அத்தனை கைது நடவடிக்கையும் நடக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளது.