மின் கட்டணம் வசூலிக்க வந்த ஊழியர்களை பொதுமக்கள் கட்டிவைத்து அடித்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு மின்வாரிய ஊழியர்கள் மின் கண்டனம் வசூல் செய்வதற்காக சென்றுள்ளனர். அவர்களை பார்த்த கிராம மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். கரோனாவால் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் எங்களிடம் எப்படி மின்சார கட்டணம் கேட்கலாம் என்று அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் அதிகாரிகளை கயிறு கொண்டு மரத்தில் கட்டி வைத்து தாக்கி உள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அதிகாரிகளை மீட்டனர். இதுதொடர்பாக ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.