கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்துள்ளன.
இந்நிலையில் தெலங்கானாவில் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் இதுவரை 503 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, 96 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் இந்த நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு, தெலங்கானாவில் ஜூன் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியபோது, தெலங்கானாவில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க இன்னும் முடிவு செய்யவில்லை, ஏப்.15க்கு பிறகு மேலும் 2 வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க முதல்வர் சந்திரசேகர ராவ் பரிந்துரை மட்டுமே செய்துள்ளார் என்று தெலங்கானா முதலமைச்சர் அலுவலகம் விளக்கமளித்திருந்த நிலையில், ஊரடங்கு குறித்த இந்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.