மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் வண்ணாரப்பேட்டையில் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதுவரை கேரளா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் அந்த வரிசையில் தெலங்கானா அரசும் இணைகிறது.
நேற்று தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையில் கூட்டப்பட்ட அமைச்சரவையில் சிஏஏ தொடர்பாக விவாதிக்கப்பட்டது. நள்ளிரவு வரை நடைபெற்ற விவாதத்தில் சிஏஏவை மத்தி அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்படும் என்றும், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பின்பு தெலுங்கானா அரசு வெளியிட்ட அறிக்கையில், “குடியுரிமை வழங்கும் விஷயத்தில் எந்தவிதமான பாகுபாடும் மதத்தின் அடிப்படையில் பார்க்கக் கூடாது என்று மத்திய அரசிடம் தெலுங்கானா அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்படும்.
சட்டத்தின் முன் அனைத்து மதங்களையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்படும். அரசியலமைப்பு வலியுறுத்தியுள்ள மதச் சார்பின்மைக்கு மாறாக மதத்தை முன்நிறுத்தி குடியுரிமை வழங்கப்படுவது கூடாது” என்று தெரிவித்துள்ளது.