Skip to main content

"நில அபகரிப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா?"- பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

Published on 25/09/2021 | Edited on 25/09/2021

 

"Do land grabbing courts work?" - Supreme Court ordered to respond!

 

சட்ட விரோத நிலங்கள் அபகரிப்பு புகார்களை விசாரிப்பதற்காக நில அபகரிப்பு தடுப்புப் பிரிவைத் தமிழ்நாடு அரசு உருவாகியிருந்தது. இது தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக, தமிழ்நாடு முழுவதும் சிறப்பு நீதிமன்றங்கள் என்பது கடந்த 2011- ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 

 

ஆனால், இது தொடர்பாக, இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்கான தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்துக் கடந்த 2011- ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இத்தகைய சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படலாம் என அனுமதி வழங்கியிருந்தது. 

 

இதனைத் தொடர்ந்து, 2011- ஆம் ஆண்டு 36 சிறப்பு நில அபகரிப்பு நீதிமன்றங்கள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இது சம்பந்தமான ஒரு வழக்கானது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் தனக்கு இழைக்கப்பட்ட நில மோசடி சம்பந்தமான வழக்குகளை, இதுவரை யாருமே விசாரிக்கவில்லை. இதற்கான சிறப்பு நீதிமன்றங்கள் எதுவும் செயல்படவே இல்லை. எனவே, இந்த வழக்குகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையிலான அமர்வு முன்பு இன்று (25/09/2021) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 2011- ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பதற்காக 36 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. 2012- ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்குகள் கூட இன்னும் நிலுவையில் தான் உள்ளது. சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகின்றனவா? இல்லையா? என்பது குறித்து விரிவாகப் பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்