ஹஜ் யாத்திரைக்கு மானியம் நிறுத்தப்பட்டதால், அரசுக்கு இந்தாண்டு 57 கோடி மிச்சமாகும் என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் புனித யாத்திரை பயனமான ஹஜ் பயணத்திற்கு இந்தியாவில் இருந்து செல்லும் முஸ்லிம் மக்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு மானியம் அளித்து வந்தது. இந்தாண்டு முதல் இது நிறுத்தப்பட்டு, இந்த மானியம் சிறுபான்மையினரின் கல்விக்காக செலவிடப்படும் என கடந்த ஜனவரியில் மத்திய அரசு அறிவித்தது.
அந்தவகையில், இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. இந்த பயணத்துக்கான ஒருங்கிணைப்பாளர்கள், உதவி ஹஜ் அலுவலர்கள் உள்ளிட்டோருக்கான பயிற்சி முகாம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய சிறுபான்மையின விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பங்கேற்று பேசியபோது,
இந்தியா விடுதலை அடைந்த பிறகு முதல் முறையாக சாதனை அளவாக, இந்தாண்டு 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 இந்தியர்கள் ஹஜ் பயணத்தை மேற்கொள்ள உள்ளனர். இதில், 47 சதவீதம் பேர் பெண்கள் என்பது மற்றொரு சாதனை. மேலும், இந்த ஆண்டு 1308 பெண்கள் ஆண் துணையின்றி தனியாக செல்கின்றனர் இவர்களுக்கு உதவுவதற்காக சவுதி அரேபியாவில் 98 உதவியாளர்களும் நிறுத்தப்படுவார்கள்.
கடந்தாண்டு 1 லட்சத்து 24 ஆயிரத்து 852 ஹஜ் பயணிகளுக்காக விமான கட்டணமாக ரூ.1030 கோடி செலுத்தப்பட்டது. இந்த ஆண்டு இந்திய ஹஜ் கமிட்டி மூலம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் 1,28,702 பேருக்காக ரூ.973 கோடி விமான கட்டணமாக செலுத்தபட உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.57 கோடி குறைவாகும். இது, மானியத்தொகை நிறுத்தப்பட்டதால் கிடைக்கும் மிச்சமாகும் என அவர் கூறினார்.