Skip to main content

தலைமை செயலகத்தில் தண்ணீர் பஞ்சம்...அரசு ஊழியர்கள் அதிர்ச்சி!

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கோடைக்காலம் முடிவடைந்த நிலையிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தலைநகரான சென்னையில் பெரிய ஐடி நிறுவனங்கள் முதல் கார் தயாரிக்கும் தொழிற்சாலை வரை தண்ணீர் தட்டுப்பாடு விட்டு வைக்கவில்லை. இதனால் ஊழியர்கள், நிறுவனங்களின் முதலாளிகள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தியுள்ளது. பல்வேறு தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள் மாணவர்களை வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்து வர அறிவுறுத்தியுள்ளது. இது போக சென்னையில் உள்ள உணவகங்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள், பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

TN WATER PROBLEM

 

 

அதே போல் சென்னையில் ஒரு குடம் தண்ணீர் ரூபாய் 3 மட்டும், ரூபாய் 5 என விற்கப்படுகிறது. இருப்பினும் இந்த தண்ணீரும் கிடைக்கவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பள்ளி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் தண்ணீர் எங்கு கிடைக்கும் என தேடி சென்று எடுத்து வருவதால் அவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது. இந்நிலையில் தமிழக தலைமை செயலகம் மற்றும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அலுவலகங்களில் சுமார் 7000 அரசு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

TN WATER PROBLEM

 

 

 

இங்கு அரசு ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் நாள்தோறும் வந்து செல்வதால் கழிவறை மற்றும் குடிநீருக்கு தண்ணீர் அத்தியாவசியத் தேவையாக உள்ளது. சென்னையில் நிலவும் தண்ணீர் பிரச்னை தலைமைச் செயலகத்தையும் விட்டுவைக்கவில்லை. இதற்கு தீர்வு காண தலைமைச்செயலக வளாகத்தில் 6 இடங்களில் ஆழ்துளைக் குழாய்கள் அமைத்துள்ளனர் தலைமைச்செயலக ஊழியர்கள் சங்கத்தினர். இதனால் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். தலைமைச்செயலகம் மட்டுமின்றி சென்னையில் பல அரசு அலுவலகங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை நீடித்து வரும் நிலையில் அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்