Skip to main content

''காலத்தை விரயம் செய்ய வேண்டாம்... நிச்சயம் 'அக்னிபத்' நிறைவேற்றப்படும்''-பாதுகாப்புத்துறை அதிகாரி அனில் பூரி பேட்டி  

Published on 19/06/2022 | Edited on 19/06/2022

 

r

 

இந்திய இராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையில் புதிய ஆள் சேர்க்கும் முறையான ‘அக்னிபத்’ திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இப்பணிகளில் பெறுவோருக்கு பல்வேறு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என பாஜக ஆளும் மாநில அரசுகளும், மத்திய அரசின் சில துறைகளும் அறிவித்துள்ளன. இருப்பினும், பல்வேறு மாநிலங்களில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் ரயில்களுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற முடியாது என பாதுகாப்புத்துறை உயரதிகாரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

இத்திட்டம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சக உயரதிகாரிகள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜென்ரல்  அனில் பூரி, ''அக்னிபத் திட்டத்தைத் திரும்பப் பெற முடியாது. நிச்சயமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். எனவே ராணுவத்தில் சேர விரும்புபவர்கள் காலத்தை விரயம் செய்யாமல் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ளும் பணிகளில் ஈடுபட வேண்டும். ராணுவத்தில் ஒழுக்கமின்மைக்கு எந்த காலத்திலும் இடமில்லை. அக்னிபத் திட்டத்தின் கீழ் பணியில் சேர்பவர்கள் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடவில்லை என்ற உறுதிமொழி கடிதம் அளிக்க வேண்டும். இந்த தகவல் காவல்துறையின் உதவியுடன் 100% உறுதி செய்யப்பட்ட பின்னரே அவர்கள் அக்னிபத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர். ராணுவ பயிற்சி அளிக்கும் சில தனியார் பயிற்சி மையங்கள் தவறான தகவல்களை அளித்து இளைஞர்களை போராட தூண்டிவிட்டுள்ளன'' என தெரிவித்தார்.

 

மேலும் ''அக்னிபத் திட்டத்தில் ஆண்டுக்கு 45 ஆயிரம் பேரும், வருங்காலத்தில் ஆண்டுக்கு 1.25 லட்சம் பேரும் தேர்ந்தெடுக்கப்படுவர். அதேபோல் பெண்களும் இத்திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்'' என்றும் அனில் பூரி தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்