கர்நாடகா மாநிலம், சிக்கலசந்திரா அருகே மஞ்சுநாத் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ரம்யா (35) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 4 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர். வெங்கடேஷ் தற்போது, நார்வே நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ரம்யா தனது வீட்டில் குழந்தைகளை கவனித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் (13-06-24) ரம்யா தனது உறவினரை செல்போன் மூலம் தொடர்புகொண்டு, ஒரு குழந்தையை கொலை செய்துவிட்டதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த போலீசார், ரம்யாவின் வீட்டிற்கு விரைந்து வந்த போது, அங்கு ஒரு குழந்தை உயிரற்று இருந்தது. உடனடியாக அந்த குழந்தையின் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரம்யா மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து, ரம்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ரம்யாவுக்கும் வெங்கடேஷுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையான பிரதிகா வாய் பேச முடியாமலும், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. அந்த குழந்தையை வளர்க்க ரம்யா மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். அந்த குழந்தைக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டும் எந்தவித முன்னேற்றம் ஏற்படவில்லை. இதில் மன உளைச்சலான ரம்யா நேற்று முன்தினம் குழந்தை பிரதிகாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என்று போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட ரம்யாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.