
ஒடிசாவில் விமான பயிற்சியின்போது ஏற்பட்ட எதிர்பாரா விபத்தில் சிக்கி சென்னையைச் சேர்ந்த பயிற்சி விமானி பரிதாபமாக இறந்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த அனீஸ் பாத்திமா (20) ஒடிசா மாநிலம் பிர்சாலாவில் அரசு விமானப் பயிற்சி கல்வி நிறுவனத்தில் பயிற்சி விமானியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பயிற்சி விமானிகளுக்கான சிறிய ரக விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன. இதில் அனீஸ் பாத்திமா பயணித்த விமானம் திடீரென எதிர்பாராதவிதமாகக் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணம் செய்த அனீஸ் பாத்திமா மற்றும் விமானி ஆகிய இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த அனீஸ் பாத்திமாவின் இறப்பு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.