Skip to main content

ஒமிக்ரானோடு இந்தியாவை விட்டு வெளியேறிய நபர் - நான்கு பேர் கைது!

Published on 14/12/2021 | Edited on 14/12/2021

 

corona

 

தென்னாப்பிரிக்கா நாட்டிலிருந்து ஜோகன்ஸ்பர்க்கை மையமாகக் கொண்ட ஒரு மருந்து நிறுவனத்தின் இயக்குநர், நவம்பர் 20 ஆம் தேதி, பெங்களூருக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில், அந்த நபருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து அவர், ஒரு தனியார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் அவரிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு வரிசைமுறை சோதனைக்காக அனுப்பப்பட்டது. இந்தச் சூழலில் நவம்பர் 26 ஆம் தேதி, நெகட்டிவ் கரோனா சான்றிதழைச் சமர்ப்பித்த அந்த நபர், நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

 

இதன்பின்னர் வெளிவந்த மரபணு வரிசை முறை சோதனையின் முடிவில், அந்த தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த அந்த நபருக்கு ஒமிக்ரான் வகை கரோனா ஏற்பட்டிருப்பது உறுதியானது. மேலும் அது இந்தியாவின் முதல் ஒமிக்ரான் வழக்காகவும் பதிவானது. அதேநேரத்தில் தென்னப்பிரிக்காவைச் சேர்ந்த நபருக்கு சில தினங்களிலேயே கரோனா நெகட்டிவ் சான்றிதழ் சமர்ப்பித்து நாட்டை விட்டு வெளியேறியது எப்படி எனச் சந்தேகம் எழுந்தது.

 

இதனையடுத்து இந்த விவகாரத்தை விசாரித்த கர்நாடகா போலீஸார், தென்னப்பிரிக்காவைச் சேர்ந்த நபர் போலியான கரோனா சான்றிதழைப் பெற அவரது நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் உதவியதைக் கண்டுபிடித்தனர். இதனைத்தொடர்ந்து அந்த இரண்டு ஊழியர்களும், போலி கரோனா சான்றிதழ் தயாரித்த இரண்டு ஆய்வக ஊழியர்களையும் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்