சம்பளம் கேட்ட ஊழியரை பெண் தொழிலதிபர் 'தன்னுடைய காலணியை வாயால் கவ்வி எடுத்து கொண்டு போ' என காயப்படுத்தியதாக புகார் எழுந்து, வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பாய்ந்துள்ளது.
குஜராத் மோர்பி நகரத்தை சேர்ந்தவர் விபோதி படேல். மோர்பி பகுதியில் பிரபல பெண் தொழிலதிபராக அவர் வலம் வந்தார். இந்த நிலையில் அவரிடம் பணியாற்றி வந்த ஊழியர் நிலேஷ் என்பவரை பணியில் இருந்து நீக்கம் செய்துள்ளார். தான் வேலையிலிருந்து நீக்கப்பட்டது ஏன் என்பதை தெரிந்து கொள்ள நிலேஷ் அவருடைய சகோதரர் மற்றும் அவருடைய ஆதரவாளர்களுடன் சென்று விளக்கம் கேட்டுள்ளார்.
ஆனால் வேலையை விட்டு நீக்கியது நீக்கியதுதான் என பெண் தொழிலதிபர் தெரிவித்துள்ளார். இதனால் பாக்கி சம்பளத்தை நிலேஷ் கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண் தொழிலதிபர் என்னுடைய 'காலணியை வாயில் கவ்வி கொண்டு செல்' என விமர்சித்துள்ளார். மேலும் தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக நிலேஷ் கொடுத்த புகார் அடிப்படையில் பெண் தொழிலதிபர் விபோதி படேல் மற்றும் ஆறு பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் மோர்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.