தங்கக் கடத்தல் தொடர்பான வழக்கில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் தொடர்பிருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஸ்வப்னா சுரேஷ், தொடர்ந்து பல அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக கேரளா நீதிமன்றத்தில் ஆஜரான ஸ்வப்னா சுரேஷ், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டை தெரிவித்தார். இதுமட்டுமின்றி கடந்த 12ம் தேதி தனது சுயசரிதையை எழுதி வெளியிட்ட ஸ்வப்னா சுரேஷ், அதில் ஐ.ஏ.எஸ். சிவசங்கரனுடன் தனியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இவர் குற்றச்சாட்டுக்கு ஆளான காலத்தில் அமைச்சர்களாக இருந்த இருவர் மீதும் கேரளா சபாநாயகர் மீதும் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து டிப்ளமாடிக் எனப்படும் தூதரக அதிகாரத்தைப் பயன்படுத்தி பார்சல் மூலம் கேரளாவுக்கு கடத்தப்பட்டது. இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், முதன்மை செயலாளர் சிவசங்கரன் ஆகியோர் கைதாகினர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜரான ஸ்வப்னா சுரேஷ், தனது வாக்குமூலத்தில் கடந்த 2016- ஆம் ஆண்டு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் துபாய் சென்றபோது சிவசங்கரன் அளித்த பணக்கட்டுகள் அடங்கிய ஒரு பை தூதரகம் மூலம் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், இந்த தங்கக் கடத்தல் வழக்கில் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, மகள் வீனா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்திருந்தார். அவரது அந்த வாக்குமூலம் கேரள மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி எதிர்க் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்துள்ள ஸ்வப்னா சுரேஷ், தன்னை அப்போதைய அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஓட்டல் அறைக்கு வரச் சொல்லி நிர்பந்தப் படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அதேபோல் மூணாறுக்கு வர வற்புறுத்தியதாக அன்றைய அமைச்சர் தாமஸ் ஐஸக் மீதும், அரசு இல்லத்திற்கு அன்றைய சபாநாயகர் ராமகிருஷ்ணன் அழைத்ததாக அவர் மீதும் ஸ்வப்னா குற்றஞ்சாட்டியுள்ளார். இவர்கள் மூவரும் பாலியல் தொடர்பாக பலமுறை வாட்ஸ் அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.