இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதுநேரத்தில் எய்ம்ஸ், ஜிப்மர், பிஜிமர் மற்றும் நிம்ஹான்சில் மருத்துவ முதுகலை படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் நுழைவுத்தேர்வான ஐ.என்.ஐ - செட் வரும் ஜூன் 16 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
இந்தநிலையில் இந்த ஐ.என்.ஐ - செட் தேர்வை தள்ளிவைக்கக்கோரி 26 மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தற்போதைய நிலையில் தேர்வை நடத்துவது, இந்திய அரசியல் அமைப்பு தங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறுவதாகும் எனவும் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் ஜூன் 16 ஆம் தேதி தேர்வு என்பது தன்னிச்சையானது என குறிப்பிட்டதோடு, தேர்வை ஒரு மாதத்திற்கு தள்ளிவைக்க உத்தரவிட்டது. ஒரு மாதத்திற்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் தேர்வை நடத்தி கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.