இந்தியாவில் கரோனா பாதிப்பு தற்போது குறைந்துவருகிறது. இருப்பினும் கரோனா மூன்றாவது அலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக போக்குவரத்து சந்திப்புகளிலும், சந்தைகளிலும், பொது இடங்களிலும் பிச்சை எடுப்பதற்கு பிச்சைக்காரர்களுக்கும், வீடற்றவர்களுக்கும் தடை விதிக்குமாறும், அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்க உத்தரவிடுமாறும் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, இன்று (27.07.2021) விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கின் விசாரணையின்போது உச்ச நீதிமன்றம், பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "மக்கள் தெருக்களில் பிச்சை எடுக்க வறுமையே காரணம். உச்ச நீதிமன்றமாக நாங்கள் மேல்தட்டு பார்வையைக் கொள்ளமாட்டோம். பிச்சை எடுப்பதைத் தடை செய்ய முடியாது. இது சமூக, பொருளாதாரப் பிரச்சனை. பிச்சை எடுப்பதற்காக மக்கள் வீதிகளில் இறங்குவது அவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைக் காட்டுகிறது. இது ஒரு சமூக, பொருளாதாரப் பிரச்சனை. ஒரு ஆணையால் இதை சரி செய்ய முடியாது" என தெரிவித்துள்ளனர்.
மேலும் கரோனா விவகாரத்தைப் பொருத்தவரை, பிச்சைக்காரர்களுக்கும், வீடற்றவர்களுக்கும் மற்றவர்களைப் போலவே மருத்துவ வசதி பெற உரிமை இருக்கிறது என தெரிவித்துள்ள நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளனர்.