சொந்த ஊர்களுக்குச் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில், பேருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், இந்த திடீர் முடக்கத்தால் இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலையோ, வருமானமோ இல்லாத நிலையில், அவர்கள் தங்களது சொந்த ஊர்களை நோக்கிப் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே செல்லும் சூழலும் நிலவி வருகிறது. மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்களுக்காகச் சிறப்பு ரயில்களை இயக்கினாலும், இதற்கு டிக்கெட் கட்டணத்திற்குப் பணமில்லாமல் பல தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். அதேநேரம், தொழிலாளர்களின் பயண கட்டணத்தை மத்திய அரசும், மாநில அரசுகளும் ஏற்றுக்கொள்வதாகக் கூறினாலும், டிக்கெட் கட்டணம் தொடர்பாகப் பல தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இதுதொடர்பான மனு ஒன்றை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் சொந்த ஊர்களுக்குச் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில், பேருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளது. மேலும் ரயில் கட்டண செலவை மாநிலங்களே பகிர்ந்து கொள்ளவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் மாநிலங்களின் அரசுகளே அவர்களின் உணவு மற்றும் மற்ற தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனக் கூறிய நீதிமன்றம், இந்த மனு தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை ஜூன் ஐந்தாம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.