
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால், உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ளது. தாஜ்மஹாலைப் பார்ப்பதற்குச் சுற்றுலாப்பயணிகள் தினந்தோறும் படையெடுத்து வருகின்றனர். இந்தநிலையில் இன்று (04.03.2021) உத்தரப்பிரதேச மாநில காவல்துறைக்குத் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், தாஜ்மஹாலில் குண்டு வெடிக்கும் எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து உத்தரப்பிரதேச காவல்துறை, தாஜ்மஹாலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினருக்குத் தகவல் அளித்தனர். இதனையடுத்து மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை அதிகாரிகள், தாஜ்மஹாலைச் சுற்றிப்பார்க்க வந்தவர்களை வெளியேற்றிவிட்டு, வெடிகுண்டு நிபுணர்களோடு சோதனை செய்தனர். சோதனை முடிவில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
இதன்பிறகு, வழக்கம்போல் தாஜ்மஹாலைச் சுற்றிபார்க்க, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் மிரட்டல் அழைப்பு, உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் நகரிலிருந்து விடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. தாஜ்மஹாலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல், அதனைத்தொடர்ந்து சோதனை ஆகியவற்றால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.