மஹாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில், 22ஆம் தேதி இரவோடு இரவாக பேச்சு முடிந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்று அதிர்ச்சியூட்டினார். இதனால் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் தாக்கல் செய்த ரிட் மனு நேற்று காலை 11:30 மணிக்கு என்.வி. ரமணா, அசோக் பூஷண் மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிவசேனா தரப்பில் கபில்சிபல், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் அபிஷேக் சிங்வி, பாஜக சார்பில் முகில் ரோத்தகி ஆகியோர் ஆஜராகினர். காரசாரமாக உச்சநீதிமன்றத்தில் விவாதம் சென்றது.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக பதிலளிக்க மஹாராஷ்டிரா மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். அதேபோல் பாரதிய ஜனதாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதத்தையும், முதல்வர் பாட்னாவிஸ்க்கு அளித்த ஆதரவு கடிதங்களையும் இன்று சமர்ப்பிக்க உத்தரவிட்டனர். அதை தொடர்ந்து வழக்கு விசாரணை இன்று காலை 10.30 நடைபெறும் என்றும், அதன்பின் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சமன்றநீதிபதிகள் அமர்வு தங்களது உத்தரவில் குறிப்பிட்டது.
இதனையடுத்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், காரசார விவாதங்களுக்கு பின்பு நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான உத்தரவு நாளை காலை 10:30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளனர்.