ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. நேற்று நடந்த இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
உலக கோப்பை முடிந்ததை தொடர்ந்து இங்கேயே தங்கும் ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக இந்தியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. ஐந்து டி20 போட்டிகள் கொண்ட இத்தொடர் நவம்பர் 23ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது.
இந்த நிலையில், இந்த தொடரில் பங்கு பெறும் 16 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ருத்ராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், இஷான் கிஷான், ஜெய்ஷ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் ஷர்மா (WK), வாசிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னாய், அர்ஸ்தீப் சிங், பிரஷித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் துணை கேப்டனாக கடைசி இரு போட்டிகளுக்கு இந்திய அணியுடன் இணைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.