இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை மோசமடைந்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த இரண்டாம் அலைக்கு ஐந்து மாநில தேர்தலும், கும்பமேளா போன்ற மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுமே காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. கரோனா இரண்டாவது அலைக்குத் தேர்தல் ஆணையமே காரணம் என விமர்சித்தது சென்னை உயர் நீதிமன்றம்.
இந்தநிலையில், இந்திய மருத்துவ சங்கத்தின் துணைத்தலைவர் டாக்டர் நவ்ஜோத் தஹியா, ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் இந்திய பிரதமர் மோடியை "சூப்பர் ஸ்ப்ரெட்டர்" (கரோனாவை வேகமாக பரப்புபவர்) என விமர்சித்தார். மேலும் கரோனா இரண்டாவது அலை பரவலுக்குப் பிரதமர் மோடியை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர், "மருத்துவ உலகம், மக்களுக்கு அத்தியாவசியமான கரோனா தடுப்பு விதிமுறைகளைப் புரியவைக்க கடுமையாக முயற்சி செய்துகொண்டிருந்தபோது, கரோனா தடுப்பு விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, பெரிய அரசியல் கூட்டங்களில் உரையாற்ற பிரதமர் மோடி தயங்கவில்லை" என கூறியுள்ளார்.
கடுமையான சுகாதார நெருக்கடிக்கு மத்தியில், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், கும்பமேளா போன்ற மதக்கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது, மோடி தலைமையிலான மத்திய அரசு மோசமான வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் எந்த அளவு தீவிரம் காட்டியது என்பது குறித்த கேள்விகளை எழுப்புகிறது எனவும் டாக்டர் நவ்ஜோத் தஹியா தெரிவித்துள்ளார்.
"ஆக்சிஜன் தட்டுப்பாடு, இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் இறக்கும் பல நோயாளிகளின் இறப்புக்கு காரணமாகியுள்ளது. ஆனால் ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகளை நிறுவுவதற்கான பல திட்டங்கள் இன்னும் மத்திய அரசின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன. இதுபோன்ற முக்கியமான தேவை, மோடி அரசால் எந்தக் கவனமும் அளிக்கப்படாமல் உள்ளது" எனவும் டாக்டர் நவ்ஜோத் தஹியா விமர்சித்துள்ளார்.