புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான முழுமையான பட்ஜெட் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 12 ஆண்டுகளாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுவந்த நிலையில், இன்று 2023 - 2024ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
இந்த மாதம் 9ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடருக்கான புதுச்சேரி சட்டமன்றம் கூடியது. முதல் நாளான 9ம் தேதி ஆளுநர் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து 10ம் தேதி ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது.
இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சரும், நிதித்துறை பொறுப்பு வகிக்கும் ரங்கசாமி இன்று காலை 9.45 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், புதுச்சேரியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் இலவச மடிகணினி வழங்கப்படும். புதுச்சேரி அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்டுவரப்படும். 70 வயது முதல் 79 வயது வரை உள்ள மீனவ முதியவர்களுக்கு இதுவரை வழங்கிவந்த ரூ. 3000 ஓய்வூதியம் இனி ரூ. 500 உயர்த்தப்பட்டு ரூ. 3,500 ஆக வழங்கப்படும். புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிலிண்டருக்கு மாதம் ரூ. 300 மானியம் வழங்கப்படும். பெண் குழந்தை பிறந்தால் வங்கியில் 18 ஆண்டுகளுக்கு ரூ. 50,000 நிரந்தர வைப்புநிதியாகச் செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.