தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் தொடர்பான தகவலை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் பாரத் ஸ்டேட் வங்கி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், தேதியை நிர்ணயித்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை இந்தியத் தேர்தல் ஆணையத்திலும் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி நாடு முழுவதும் 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது. மேலும் தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், வாங்கிய தேதி வாங்கிய தொகை ஆகியவை விவரங்களாக தேர்தல் ஆணையத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் அவை அனைத்தும் பென்டிரைவ் வடிவில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்பிஐ வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, தேர்தல் பத்திரம் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடைகள் குறித்த தகவல்கள் வெளியானது.
இதையடுத்து, தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று (15-03-24) உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேர் கொண்ட அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சீலிடப்பட்ட கவரில் தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களைத் தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தது. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை? என எஸ்பிஐக்கு கேள்வி எழுப்பினர். தீர்ப்பில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வழங்க சொல்லியிருந்தோம் எனத் தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் பத்திர எண்களையும் எஸ்பிஐ வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் பத்திர விவகாரத்தில் பா.ஜ.க.வை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
இந்த நிலையில், தேர்தல் பத்திரம் ரத்து தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “இந்திய அரசியலில் கறுப்புப் பணத்தின் செல்வாக்கை ஒழிக்க தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது, இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் முழுமையாக மதிக்கிறேன். ஆனால், தேர்தல் பத்திரங்களை முற்றிலுமாக ரத்து செய்வதற்குப் பதிலாக, அதை மேம்படுத்தியிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
பாஜக ஆட்சியில் இருப்பதால் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தால், பா.ஜ.க பலனடைந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. இது உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் என்றும் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். இவருக்கு யார் இதை எழுதி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு சுமார் 6,000 கோடி ரூபாய் கிடைத்தது. மொத்த அரசியல் கட்சிகளின் பத்திரங்கள் எண்ணிக்கை ரூ.20,000 கோடி. அப்படியென்றால் மீதி ரூ.14,000 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் எங்கே போனது?” என்று கூறினார்.