நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29- ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 1- ஆம் தேதி 2021- 2022 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லி எல்லையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால், இரு அவைகளும் அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இன்று (08/02/2021) மாலை 04.00 மணிக்குக் கூடிய மக்களவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவையை மாலை 05.00 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.