
ஆந்திராவில் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கிறது. இதனால் அங்கு தீவிர பரப்புரை அரசியல் கட்சிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.