இந்தியாவின் முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் நினைவைப் போற்றும் வகையில் 150 கிலோவில் ஐம்பொன் சிலை வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி புதுதில்லி ராணுவ தலைமையகத்தில் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவர் இந்திய நாட்டிற்கு ஆற்றிய பணிகளையும், அவரது நினைவையும் போற்றும் வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் 150 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ. 5 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
கும்பகோணத்தில் தயார் செய்யப்பட்ட இந்த ஐம்பொன் உருவ சிலை ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் நகருக்கு கொண்டுவரப்பட்டது. தெற்கு ரத வீதியில் வைத்து மாலை அணிவிக்கப்பட்டது. இந்த உருவச்சிலை புதுச்சேரியில் இருந்து ரயில் மூலமாக டெல்லிக்கு அனுப்பப்பட்டு, டிசம்பர் மாதம் பத்தாம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் வைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான அனுமதியும் தற்போது கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே முதன்முறையாக ராணுவ வீரருக்காக உருவாக்கப்பட்ட ஐம்பொன் சிலை எனவும் கூறப்படுகிறது.