Skip to main content

“பாதுகாப்பான இடமாக இருக்கும் என நினைத்தோம்...” - பாதிக்கப்பட்ட ஸ்பெயின் பெண்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Spanish woman affected says We thought it would be safe...

பிரேசிலைச் சேர்ந்த ஸ்பானிஷ் பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் மோட்டார் சைக்கிளிலேயே உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டு வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 66 நாடுகளுக்கு இந்த தம்பதி பயணம் செய்துள்ளனர். தாங்கள் மேற்கொள்ளும் சுற்றுலா பயணங்கள் தொடர்பான விவரங்களையும், தங்களுடைய சாதனைகளையும் அவ்வப்போது அவர்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றி வந்தனர்.

இதுவரை இத்தாலி, ஈரான் எனப் பல நாடுகளுக்குச் சென்ற இந்த தம்பதி ஆப்கானிஸ்தான் சென்றதைத் தொடர்ந்து அடுத்த பயணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தனர். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாகவே இந்தியாவிற்கு வந்த இவர்கள் தென்னிந்தியாவின் முக்கிய பகுதிகள், லடாக், காஷ்மீர், ஹிமாச்சல்பிரதேஷ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சுற்றுலாத் தலங்களைப் பார்த்ததோடு, இந்தியாவில் தாங்கள் மேற்கொண்ட சாகச பயணம் குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றினர்.

அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இருவரும் தனித்தனி பைக்கில் ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அன்று இரவு தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற ஒரு குக்கிராமத்தில் தற்காலிகமாக டெண்ட் அமைத்து இருவரும் தங்கியுள்ளனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இளைஞர்கள் சிலர், இருவரையும் தாக்கியதோடு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சமூக வலைத்தளங்களில் அந்த தம்பதி வீடியோ பதிவிட்டுள்ளனர். அந்த பகுதியில் ரோந்து பணிக்கு வந்த காவல்துறையினர், வெளிநாட்டவர் இருவர் பலத்த காயங்களுடன் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தங்களுக்கு நேர்ந்த முழு துயரத்தையும் அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து விசாரித்த நிலையில், குற்றவாளி ஒருவன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்குப் பிறகு தனது கணவருடன் உலக சுற்றுப் பயணத்தை மேற்கொள்வதற்குத் தயாரானார். புறப்படுவதற்கு முன்பாக அந்த பெண், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்திய மக்கள் நல்லவர்கள். நான் ஒட்டுமொத்தமாக இந்திய மக்களை குறை சொல்லவில்லை. என்னிடம் மோசமாக நடந்துகொண்ட குற்றவாளிகள் மட்டுமே மோசமானவர்கள் என்கிறேன். இந்திய மக்கள் என்னிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்கள். என்னையும் நன்றாக கவனித்துக் கொண்டார்கள். 

அமைதியாகவும், அழகாகவும் இருந்ததால் இரவில் தங்குவதற்கு அந்த இடத்தை தேர்வு செய்து தங்கினோம். தனியாக தங்குவதற்கு அந்த இடம் பாதுகாப்பானதாக இருக்கும் என நினைத்தோம். கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவில் பல கி.மீ தூரத்துக்கும் மேலாகப் பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டோம். எங்களுக்கு எந்த பகுதியிலும் பிரச்சனை ஏற்படவில்லை. முதல்முறையாக இது நடந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கு பெண்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்