புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகின்றது. கடந்த ஒருவார காலமாக 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகின்றது. இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி முதல் புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொண்ட கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜெயபாலுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சட்டப்பேரவை கூட்ட அரங்கம் மூடப்பட்டு சட்ட்டப்பேரவை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதனால் 25-ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரே திறந்தவெளி மரத்தடியில் நடத்தி முடிக்கப்பட்டது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே முதலமைச்சர் உட்பட சபாநாயகர், துணை சபாநாயகர், அமைச்சர்கள், அனைத்து சட்டமனற உறுப்பினர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். மேலும் நேற்று சட்டப்பேரவை காவலர்கள் இருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அணைத்து ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலர் அறிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை சட்டப்பேரவை வளாகத்தின் ஒரு பகுதியில் முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, துணை சபாநாயகர் பாலன், என்.ஆர் காங்கிரஸ் உறுப்பினர் சந்திர பிரியங்கா, பாரதிய ஜனதா கட்சி நியமன உறுப்பினர் சாமிநாதன் ஆகியோருக்கு சுகாதாரத்துறை சார்பில் உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.
இதனிடையே முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், "மத்திய அரசின் கணக்குப்படி 10 லட்சம் மக்களில் 15 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படவேண்டும் என்று கூறி உள்ளது. தற்போது 35 ஆயிரம் பேருக்கு புதுச்சேரியில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது தனியார் மருத்துவமனைளிலும் கரோனா பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிதி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தும் இதுவரை வரவில்லை. மாநில பேரிடர் நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பெறும் வகையில் மாநில அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. ஆனால் பொதுமக்கள் மத்தியில் தேவையான விழிப்புணர்வு இல்லை. சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்குத் தொற்று இருந்ததால் சட்டமன்றமே நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும். மக்கள் கரோனா நோய்த் தொற்றை அலட்சியமாகக் கருதுகின்றனர். இதனைத் தவிர்க்கவேண்டும். கரோனா நோயிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் மக்கள் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.