இந்திய பிரதமர் மோடி, கடந்த ஐந்தாம் தேதி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதம மந்திரி கரிஃப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் பயனாளிகளுடன் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து இன்று (07.08.2021) மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிரதம மந்திரி கரிஃப் கல்யாண் அன்னா யோஜனா திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
இந்த உரையாடலின்போது பேசிய பிரதமர் மோடி, கைவினை பொருட்களைத் தயாரித்து விற்கும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக, பண்டிகைக் காலங்களில் இந்தியர்கள் கைவினை பொருட்களை வாங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து அவர், "கரோனாவால் ஏற்பட்ட நெருக்கடியைக் கையாளும் தனது வியூகத்தில் இந்தியா ஏழைகளுக்கு முன்னுரிமை வழங்கியது. பிரதான் மந்திரி கரிஃப் கல்யாண் அன்ன யோஜனாவாக இருந்தாலும் சரி, பிரதான் மந்திரி கரிஃப் கல்யாண் ரோஸ்கர் யோஜனாவாக இருந்தாலும் சரி, முதல் நாளிலிருந்தே ஏழைகளின் உணவு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து நாம் சிந்தித்தோம்" என கூறினார்.
மேலும் "கரோனா காலகட்டத்தில் 80 கோடி இந்தியர்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது கோதுமை, அரிசி, பருப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது மட்டுமின்றி, 8 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்கள் கூட வழங்கப்பட்டன. 20 கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது" எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.