2018 ஆம் ஆண்டில் தன்பாலின ஈர்ப்பில் காதல் என்பது குற்றமற்றது என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. இருப்பினும், தன்பாலின திருமணம் என்பது இந்தியாவில் தற்போது வரை சட்டமாகவில்லை. இந்நிலையில், சிறப்பு திருமண சான்றிதழின் கீழ் தங்களது திருமணத்தை அனுமதிக்க உரிய உத்தரவு பிறப்பிக்கக் கோரி தன்பாலின ஜோடி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் பிற உயர்நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள தன்பாலின ஈர்ப்பு திருமண வழக்குகளை விசாரிக்க முடிவு செய்தது. தொடர்ந்து தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது குறித்து விளக்கமளிக்கவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
“தன்பாலின திருமணம் என்பது இந்திய குடும்ப அமைப்பு என்ற கருத்துடன் ஒத்துப் போகாது. இந்திய குடும்ப அமைப்பு என்பது கணவன், மனைவி மற்றும் குழந்தைகளை உள்ளடக்கியது. இந்திய குடும்ப அமைப்பில் ஆண், பெண் என உயிரியல் வேறுபாடுகள் கொண்ட இருவர் திருமண ஒப்பந்தம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வதே சிவில் சமூகம். தன்பாலின ஈர்ப்பாளர்களை குடும்ப அமைப்புடன் ஒப்பிடக்கூடாது. அரசியலமைப்புச் சட்டம் 19ன் படி குடிமக்கள் சேர்ந்து வாழத் தடையில்லை. அதே நேரத்தில் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவது பற்றி அரசு தான் தெரிவிக்கும். குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களை சேர்க்க இயலாது. தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கூடாது” என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதிலளித்தது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட சட்ட அமர்வுக்கு மாற்றியதோடு, வழக்கின் விசாரணை ஏப்ரல் 18 ஆம் தேதி தொடங்கும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “யாருடைய தனிப்பட்ட சுதந்திரத்திலோ அல்லது செயல்பாடுகளிலோ மத்திய அரசு தலையிடாது. தனிநபர்களின் செயல்பாடுகளில் மத்திய அரசு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதனால் குழப்பம் வேண்டாம். ஆனால், திருமண முறை என்பது வேறு, அது கொள்கை சார்ந்த விஷயம். இவ்விரண்டும் முற்றிலும் வேறுபட்டவை” என்றார்.