காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி இந்தியா முழுவதும் சுமார் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாட இருக்கிறார். இந்த பயணத்திற்கான திட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை செப்டம்பர் மாதம் 7ம் தேதி ராகுல் துவங்கினார். கடந்த 10ம் தேதி கேரளாவிற்கு சென்ற அவர் தொடர்ந்து கர்நாடகாவில் நடைபயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் 29ம் நாளான இன்று பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தின் மாண்டியா பகுதியில் இருந்து இன்று காலை தனது நடை பயணத்தை ராகுல் காந்தி துவங்கினார். இந்த ஒற்றுமை நடைபயணத்தில் இன்று அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பங்கேற்றார். உடல்நிலை காரணமாக நீண்ட நாட்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத நிலையில் அவர் இந்த யாத்திரையில் பங்கேற்றுள்ளார்.
கர்நாடகாவில் 6 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் வர இருக்கும் நிலையில் இந்த நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு ஊக்கம் கொடுக்கும் என தொண்டர்களால் நம்பப்படுகிறது. மேலும் வரப் போகும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற, காங்கிரஸ் கட்சிக்குள் ஒற்றுமையை வலுப்படுத்தி பாஜகவிற்கு எதிராக வலுவான முறையில் போராட வேண்டும் எனவும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களிடம் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியகியுள்ளன.
இந்நிலையில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியுடன் பிரியங்கா காந்தியும் நடைபயணத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் மட்டும் ராகுல் காந்தி 22 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.