Pm Cares குறித்துக் கேள்வியெழுப்பிய சோனியா காந்தி மீது கர்நாடக காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சூழலில், இந்த வழக்கை வாபஸ் பெறுவது குறித்து கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் சிவகுமார், அம்மாநில முதல்வர் எடியூரப்பாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
"PM-CARES நிதி புலம்பெயர்ந்தோரைச் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்வதற்கும், வெளிநாட்டிலிருந்து இந்தியர்களைத் திருப்பி அழைத்து வருவதற்கும் பயன்படுத்தப்படாவிட்டால், அது எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது" எனக் காங்கிரஸ் கட்சி அண்மையில் கேள்வி எழுப்பி இருந்தது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிடப்பட்ட நிலையில், இது தொடர்பாக சிவமொகாவின் சாகர் வட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது ஐ.பி.சி. 153 மற்றும் ஐ.பி.சி. 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து வியாழக்கிழமை, கர்நாடக பிரதேச காங்கிரஸ் குழுத் தலைவர் டி.கே.சிவகுமார், கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவைச் சந்தித்து எஃப்.ஐ.ஆரை திரும்பப் பெறுவது குறித்து ஆலோசித்துள்ளார். இந்த ஆலோசனையின் போது, இவ்விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மாயுடன் விவாதித்து, என்ன செய்ய முடியும் என்று பார்ப்பதாக சிவகுமாரிடம் எடியூரப்பா தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.