உ.பி மாநிலம் ஜான்சி பகுதிக்கு அருகில் உள்ள கிராமம் தேரா. இந்தக் கிரமாத்தைச் சேர்ந்த அநோஜ் என்ற இளைஞர் இன்று காலை அவரின் விவசாய நிலத்திற்குச் சென்று அங்கு விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அவருக்கு தண்ணீர் தாகம் எடுக்கவே அருகில் இருந்த அவரின் கிணற்றுக்கு சென்று தண்ணீர் எடுத்துக் குடித்துள்ளார். அவர் நீர் அருந்திக்கொண்டு இருக்கும் போதே எதிர்பாராத விதமாக கிணற்றின் மேல் பகுதியில் மண் சரிந்ததால் அவர் திடீரென கிணற்றில் விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கிணற்றில் இருந்து கூக்குரல் எழுப்பியுள்ளார். அவரின் குரலைக் கேட்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்கப் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர்.
ஆனால், கிணறு மிகவும் பழமையானதாக இருந்ததால் அவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. இதனால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே தீவிர முயற்சிக்கு பிறகு இளைஞர் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டார். இதற்கிடையே மேலே வந்த அந்த இளைஞரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து கருநாகம் ஒன்று வெளியே வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் அருகில் இருந்த கட்டையின் உதவியுடன் பாம்பை வெளியே தள்ளியுள்ளார். பாம்பு சில நிமிடங்கள் இளைஞரின் பேண்டுக்குள் இருந்த நிலையிலும் அவரை தீண்டவில்லை என்பதை கிராம மக்கள் வியப்புடன் பார்த்துள்ளார்கள்.